சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம்: தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது - டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை


சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம்: தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது - டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
x

சாக்கடை கால்வாயில் 7 சிசுக்கள் பிணம் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பெலகாவி தனியார் ஆஸ்பத்திரியை அரசு முடக்கியது. மேலும் அங்கு பணியாற்றிய டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெலகாவி:

7 சிசுக்கள் பிணம்

பெலகாவி மாவட்டம் மூடலகி டவுன் பஸ் நிலையம் அருகே ஓடும் சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று முன்தினம் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட 7 சிசுக்கள் பிணம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மூடலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 7 சிசுக்களின் பிணமும் மூடலகியில் செயல்பட்டு வரும் வெங்கடேஷ் என்ற தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து வீசப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்த ஆஸ்பத்திரி ஊழியர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 7 சிசுக்களின் பிணங்களையும் சாக்கடை கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பெலகாவி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மகேஷ் கோனி மற்றும் மூடலகி போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரியின் டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரித்தனர்.

ஆஸ்பத்திரி முடக்கம்

அப்போது கடந்த 3 வருடங்களாக பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிசுக்களின் பிணங்களை ஆஸ்பத்திரி ஊழியர் சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. வெங்கடேஷ் மருத்துவமனையில் ஸ்கேன் சென்டரும் உள்ளது. அங்கு வரும் கர்ப்பிணிகள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதையடுத்து வெங்கடேஷ் ஆஸ்பத்திரி மற்றும் ஸ்கேன் சென்டருக்கு நேற்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவற்றின் செயல்பாட்டை முடக்கினர். மேலும் டாக்டர்கள், ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story