கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்முதல்-மந்திரி சித்தராமையா உறுதி
காங்கிரஸ் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளதால், தங்களுடன் கைகோர்த்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
கர்நாடகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. மே மாதம் 13-ந் தேதி முடிவுகள் வெளியானது. அப்போது 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்திருந்தது.
இதையடுத்து மே மாதம் 20-ந் தேதி பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்று இருந்தார்கள்.
சட்டசபை தேர்தலின் போது 5 முக்கிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி சக்தி திட்டம், அன்னபாக்ய திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது.
100 நாட்கள் நிறைவு
அடுத்ததாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் முதல்-மந்திரி சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருவில் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டம் மட்டும் டிசம்பரில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நாட்களுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதால் முதல்-மந்திரி சித்தராமையா மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் கிரகலட்சுமி திட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுவதால், முதல்-மந்திரி சித்தராமையா மைசூருவிலேயே தங்க உள்ளார்.
இதற்கிடையில் நேற்று காங்கிரஸ் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்
எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்து இன்றுடன் (அதாவது நேற்று) 100 நாட்கள் நிறைவு பெறுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த சந்தர்ப்பத்தில் எங்களுடன் கைகோர்த்து செயல்பட்ட ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மாநில மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து 135 தொகுதிகளில் வெற்றி பெற செய்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கி உள்ளனர்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு, இந்த மாநில மக்களின் அனைத்து தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும்.
அனைவருக்கும் நன்றி
சட்டசபை தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். முன்மாதிரி மாநிலமாக கர்நாடகத்தை எடுத்து செல்வோம். மேலும் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் மற்றொரு முறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் நிரந்தரமாக எங்களுக்கு வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் சித்தராமையா கூறியுள்ளார்.