கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றார். வேட்புமனுவில் கணவரது வருமானத்தை தெரிவிக்காததால், கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இதை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு (2023) மே 4-ந்தேதி விசாரித்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில், "வேட்பாளரின் கணவர் சிங்கப்பூர் அல்லது வேறு எந்த நாட்டில் வேலை செய்தாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், அவரின் வருமானத்தை அறிய வாக்காளர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் வேட்பாளர் அதை வழங்கத் தவறியுள்ளார்" என்று வாதிடப்பட்டிருந்தது.

அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "கேட்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் வாக்காளர்கள் நான் வேட்புமனுவில் தெரிவித்துள்ள தரவுகளின் அடிப்படையில் எனக்கு வாக்களித்துள்ளனர். எனவே தன் மீதான வழக்கு விசாரணையை தடை செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சந்தானகுமார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்க உள்ளது.


Next Story