தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை... அதிக வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்


தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை... அதிக வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்
x

நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2.18 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது.

போபால்,

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஏற்காத வாக்காளர்களுக்காக 'நோட்டா' முறை கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இந்த 'நோட்டா' பொத்தானும் இணைக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் 51,660 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தது. இதுவே சாதனை அளவாக தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 2.18 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால்வானி 11.75 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது இந்திய தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும்.

அதேநேரம் நோட்டாவுக்கு இவ்வளவு அதிகமான வாக்குகள் கிடைத்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முக்கிய காரணம் காங்கிரசின் வேண்டுகோள் ஆகும்.

இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டு இருந்த வேட்பாளர் அக்ஷய் காந்திபாம் கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின்னர் அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.

இதனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதிய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. அத்துடன் இந்தூர் தொகுதியின் 72 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் போட்டிக்களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது.

எனவே பா.ஜனதாவுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்த தொகுதியில் நோட்டாவுக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இதுவும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைப்பதற்கு காரணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story