மணிப்பூரில் பதற்றம்: மின் நிலையம் சூறையாடல்; கிராமவாசிகள் 4 பேர் படுகொலை


மணிப்பூரில் பதற்றம்:  மின் நிலையம் சூறையாடல்; கிராமவாசிகள் 4 பேர் படுகொலை
x

ராணுவ தலைமையகம் அருகே உள்ள லீமகோங் என்ற மின் நிலையம் மீது நேற்றிரவு சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3-ந்தேதி குகி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதில், 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். வன்முறை பல மாதங்களுக்கு நீடித்தது. இதனால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, இணையதள சேவையை அரசு முடக்கியது. எனினும், அவ்வப்போது பழங்குடி சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல்கள் ஏற்பட்டன. பின்பு மெல்ல நிலைமை சீரடைந்தது.

இந்த நிலையில், மணிப்பூரில் 4 பேர் கொலை செய்யப்பட்டு உள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிஷன்பூர் மாவட்டத்தில் வாங்கூ கிராமவாசிகள் 4 பேர் கடத்தி செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அவர்கள் தாரா சிங், ரோமன், இபோம்சா மற்றும் அவருடைய மகன் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் அடுப்பெரிக்க மரக்குச்சிகளை சேகரிக்க சென்றபோது, ஆயுதமேந்திய மர்ம நபர்கள் தாக்கி, கடத்தி சென்றுள்ளனர் என அஞ்சப்படுகிறது. அவர்கள் வேற்று சமூக பழங்குடியினர் என சந்தேகிக்கப்படுகிறது. உடல்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோன்று நேற்றிரவு சில மர்ம நபர்கள், ராணுவ தலைமையகம் அருகே உள்ள லீமகோங் என்ற மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.

மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாய கூடிய ஆற்றில் எண்ணெயை கசிய செய்து கலந்து விட்டுள்ளனர். இந்த எண்ணெய் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆற்றை சுற்றி வசிக்க கூடிய மக்கள் தப்பி வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர். இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.


Next Story