தெலுங்கானா சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது: தலைமை தேர்தல் அதிகாரி
ஒவ்வொருவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முதல்-மந்திரி சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதுதவிர, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியை சந்திக்கின்றன.
இந்த நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் ஐதராபாத்தில் எஸ்.ஆர். நகரில் வாக்கு பதிவு செய்த பின்பு இன்று கூறும்போது, காலை 7 மணி முதல் நகர பகுதிகள் மற்றும் உள்ளடங்கிய பகுதிகளிலும், வாக்கு பதிவு மையங்களுக்கு வெளியே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று, வாக்களித்து செல்ல கூடிய காட்சியை காண முடிந்தது என கூறினார்.
தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
இந்நிலையில், தெலுங்கானாவில் காமாரெட்டி தொகுதிக்கு உட்பட்ட வாக்கு மையம் ஒன்றில், மின்னணு வாக்கு பதிவு இயந்திர கோளாறால், வாக்கு பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.