தெலுங்கானா சட்டசபைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் கஜ்வெல் ஏற்கனவே சந்திரசேகர ராவ் வெற்றி பெற்ற தொகுதி. கமரெட்டி தொகுதி, கே.சந்திரசேகர ராவின் பூர்வீக மாவட்டம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கானா முதல்மந்திரி கே. சந்திரசேகர் ராவ், கஜ்வெல் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.