டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான்சானியா அதிபருக்கு கவுரவ டாக்டர் பட்டம்
இந்தியா வந்துள்ள தான்சானியா அதிபர் சமியா சுலுகு ஹசனுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஆப்பிரிக்க தேசமான தான்சானியா நாட்டு அதிபர் சமியா சுலுகு ஹசன், 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார். இந்த நிலையில் அவருக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்திய-தான்சானிய உறவை வலுப்படுத்த முக்கியப் பங்காற்றியதற்காகவும், பொருளாதார ராஜதந்திர ஊக்குவிப்புக்காகவும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பலதரப்பு தன்மையில் வெற்றி பெற்றதற்காகவும் இந்த பட்டம் வழங்கப்பட்டது. தான்சானியாவின் முதல் பெண் அதிபரான சமியா சுலுகு ஹசன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் பெண் ஆவார்.
இந்தியா அற்புதமான நாடு
அவர் தனது ஏற்புரையில், 'இந்திய பாடல்கள், படங்கள், சமையல் என்று உலகத்தில் யாரும் இந்தியாவால் ஈர்க்கப்படாமல் இருக்க முடியாது. நான் 1988-ம் ஆண்டு இங்கே ஐதராபாத்துக்கு படிக்க வந்தபோது அதை உணர்ந்தேன். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான், வருகைதரும் ஒரு விருந்தினராக அல்லாமல், இதன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக நிற்கிறேன். இதுதான் இந்தியாவை தவிர்க்கமுடியாத, அற்புதமான நாடாக ஆக்குகிறது. ஆங்கில ஆட்சிக்கு எதிரான எங்களின் போராட்டத்தில், சாய்ந்துகொள்ள இந்தியா தோள் கொடுத்தது. நம் இரு நாடுகளும் இணைந்து, உலகில் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு குரல் கொடுக்கலாம்' என்று கூறினார். இவர், ஐதராபாத்தில் உள்ள ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய நிறுவனத்தில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார்.
மத்திய மந்திரிகள் பங்கேற்பு
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான்சானியா அதிபருக்கான பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் தனது உரையில், இந்த பட்டமளிப்பு விழா பெண்கள் சக்தியின் வெளிப்பாடு என்றார். இவர் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் ஆவார்.