மேகதாது திட்டத்தை தமிழ்நாடு தேவையில்லாமல் எதிர்க்கிறது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பியது.
இதற்கிடையே காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும். மழை பற்றாக்குறை நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. மேகதாது திட்டத்தை தமிழ்நாடு தேவையில்லாமல் எதிர்க்கிறது" என்று கூறினார்.