சுவாதி மாலிவால் விவகாரம்; விவாதிப்பதற்கு இதை விட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன - அகிலேஷ் யாதவ்


சுவாதி மாலிவால் விவகாரம்; விவாதிப்பதற்கு இதை விட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன - அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 16 May 2024 10:25 AM GMT (Updated: 16 May 2024 10:27 AM GMT)

சுவாதி மாலிவால் விவகாரத்தை விட மணிப்பூர் சம்பவம், பிரஜ்வால் ரேவண்ணா சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

லக்னோ,

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆம் ஆத்மி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுவாதி மாலிவால் விவகாரம் குறித்து கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கெஜ்ரிவால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், அகிலேஷ் யாதவ் பதிலளித்தார். அப்போது அவர், "விவாதிப்பதற்கு இதை விட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன" என்றார். மேலும் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம், பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு, மல்யுத்த வீரர்கள் போராட்டத்தின்போது டெல்லி போலீசாரால் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை குறிப்பிட்டு பா.ஜ.க. அரசின் மீது விமர்சனத்தை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பேசுகையில், "பா.ஜ.க. ஆட்சியில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு பிரதமர் மோடியும், பா.ஜ.க. கட்சியும் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவி நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தால் இந்த நாட்டு மக்கள் இன்று வரை வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மவுனமாக இருந்தார்.

ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பிரஜ்வால் ரேவண்ணா, பா.ஜ.க.வின் உதவியால் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். உத்தர பிரதேசத்தில் குல்தீப் சிங் செங்கார் மற்றும் ஹத்ராஸ் வழக்குகள் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்று தெரிவித்தார்.


Next Story