சூரத்தில் ராமர் கோவில் வடிவிலான வைர நெக்லஸ்
இந்த வைர நெக்லஸில் 5 ஆயிரம் அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
காந்திநகர்,
உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான சூரத் வைர வர்த்தக மைய கட்டிடத்தை நேற்று முன்தினம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். வைர வியாபாரத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் முன்னிலை வகிக்கிறது.
சூரத்தில் உள்ள வைர வியாபாரிகள், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வடிவிலான வைர நெக்லஸை வடிவமைத்துள்ளனர். இந்த வைர நெக்லஸில் 5 ஆயிரம் அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் நெக்லஸை உருவாக்க 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. 40 கலைஞர்களை கொண்டு 35 நாட்களில் இந்த நெக்லஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெக்லஸ் வணிக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல. இதை நாங்கள் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்க இருக்கிறோம் என வைர வியாபாரி கவுசிக் தெரிவித்துள்ளார். தற்போது இந்த நெக்லஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.