கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை


கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
x

கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

கோவை வடவள்ளியை சேர்ந்த விஞ்ஞானி காமராஜ் என்பவர், சென்னை ஐகோட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில் தன்னுடைய 2 மகள்களை வலுக்கட்டாயமாக கோவை ஈஷாவில் துறவறம் மேற்கொள்ள செய்துள்ளதாகவும், எனவே மகள்களை மீட்டு தரக்கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் சமூகநலத்துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு நேற்று முன்தினம் விசாரணையை தொடங்கியது.

ஆறு குழுக்களாக பிரிந்து ஈஷா யோகா மையத்தில் துறவறம் மேற்கொண்டவர்கள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையானது 2 நாட்களாக நடைபெற்றது. இந்த விசாரணையை வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கோவை ஈஷா மையத்தில் சோதனை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதை எதிர்த்து கோவை ஈஷா யோகா மையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.

அப்போது 2 பெண்களும் 24 மற்றும் 27 வயதில் ஈஷா மையத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் தங்கி இருப்பதாக தெரிவித்தனர். இருவரின் வயது, மெச்சூரிட்டி, புரிதல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் இரண்டாவது ஆட்கொணர்வு மனு ஏற்புடையதல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில் ஈஷா மையத்தில் தமிழ்நாடு காவல்துறை இதற்கு மேல் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண் துறவிகளுடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் காணொலி மூலம் பேச உள்ளார். அதன் பிறகு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஈஷா மையத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் இருக்கும் வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story