பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: ராகுல், சரத்பவார், மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்


பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: ராகுல், சரத்பவார், மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 23 Jun 2023 5:51 AM IST (Updated: 23 Jun 2023 10:35 AM IST)
t-max-icont-min-icon

மக்களவை தேர்தலையொட்டி, பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ராகுல் காந்தி, சரத்பவார், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பாட்னா,

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டத் தொடங்கி உள்ளன.

இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

அதே நேரத்தில், எதிர்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாக திரட்டி, சுமார் 400 தொகுதிகளில், பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அதிரடி முயற்சி நடக்கிறது.

நிதிஷ் குமார் மும்முரம்

குறிப்பாக இமாசலபிரதேசத்திலும், கர்நாடகத்திலும் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணம் உருவாகி, மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளது.

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்த விஷயத்தில் அவர் எற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுடன் சென்று சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

அதன் அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் இன்று (23-ந்தேதி) கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு-வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நல்ல தொடக்கம்'

இந்தக் கூட்டத்தையொட்டி கருத்து தெரிவிக்கையில், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கை கோர்க்க வேண்டும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டம், ஒரு நல்ல தொடக்கம், அனைத்துக் கட்சிகளும் நாட்டின் அரசியல் சாசனத்தைக் காப்பதற்கு பல விஷயங்களில் ஒரே தரப்பில் உள்ளன என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி அழைக்கப்படவில்லை.

ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவர் சவுத்ரி ஜெயந்த் சிங், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதால் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்துள்ளார். ஆனால் இது குறித்து அவர் நிதிஷ் குமாருக்கு ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். கூட்டத்துக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

தலைவர்கள் குவிகின்றனர்

இந்தக் கூட்டத்துக்காக தலைவர்கள் நேற்றே பாட்னாவுக்கு வந்து குவியத்தொடங்கினர். அவர்கள் மாநில அரசின் விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பாட்னா சென்றடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்துக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்கிற தலைவர்களுக்கு சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாட்னாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் வேட்பாளர் யார்?

எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் நிலையில், அவற்றின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுகிறது. இதில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பது பா.ஜ.க.வின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆனால் இதையொட்டி பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கருத்து தெரிவிக்கையில், "பிரதமர் வேட்பாளர் யார் என்பது மிகவும் முக்கியம் அல்ல. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு, தேர்தலில் போட்டியிட வேண்டும். இப்படிச்செய்கிறபோது, பா.ஜ.க. 100 இடங்களுக்குள்தான் வெற்றி பெற முடியும். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றிய பிறகு கூட்டாக முடிவு செய்யலாம்" என தெரிவித்து இருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அதன் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் எதிர்பார்க்கிறார்.

ஆனால் மக்களவை தேர்தல் தவிர்த்து பிற விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என தெரியவில்லை.


Next Story