அக்னிபத் திட்டம்; சில அரசியல் கட்சிகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றன; மத்திய மந்திரி விமர்சனம்
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ராணுவ ஆள்சேர்ப்பில் புதிய திட்டமாக அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கும் இந்த அக்னிபத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 3-வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது. வடமாநிலங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அக்னிபாத் திட்ட விவகாரத்தில் இளைஞர்களை சில அரசியல் கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கவாலியரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நரேந்திர சிங் தோமர் கூறுகையில், " பாதுகாப்பு படையில் ஆள்சேர்க்கும் திட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இந்த திட்டம் உள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மனிதவளத்தை திறனுள்ளதாக்கும் நீண்ட கால திட்டம் இதுவாகும். இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் எந்த பாதையும் அடைக்கப்படவில்லை. ஆனால், சில அரசியல் கட்சிகள் அவசியம் இன்றி மக்களை தவறாக வழிநடத்துகின்றன"என்றார்.