திறன் மேம்பாட்டுக்கழக ஊழல் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
2 நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்-மந்திரியாக இருந்தபோது திறன் மேம்பாட்டுக்கழக நிதியில் ஊழல் செய்ததாகவும், இதனால் மாநில அரசுக்கு ரூ.371 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த நவம்பர் 20-ந்தேதி அவருக்கு மாநில ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. முன்னதாக இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை கடந்த செப்டம்பர் 22-ந்தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். திறன் மேம்பாட்டுக்கழக ஊழல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெலா திரிவேதி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து கடந்த அக்டோபர் 17-ந்தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த 2 நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் அரசு ஊழியரை விசாரிக்க முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க உரிய முன் அனுமதி பெறவில்லை என நீதிபதி அனிருத்தா போஸ் கூறினார்.
ஆனால், நேர்மையற்ற அரசு ஊழியர்களை விசாரிக்க முன் அனுமதி பெறாததை குறையாக கருத முடியாது. எனவே முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய இயலாது என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பெலா திரிவேதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து 2 நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.