சிவமொக்காவில் போலி டாக்டருக்கு 6 மாதம் சிறை


சிவமொக்காவில்  போலி டாக்டருக்கு 6 மாதம் சிறை
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் போலி டாக்டருக்கு 6 மாதம் சிறை விதித்து சிகாரிப்புரா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சன்னகேசவா நகரை சேர்ந்தவர் குண்டப்பா. இவர் அப்பகுதியில் வித்யா என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் அங்கு நோயாளிகளுக்கு குண்டப்பா சிகிச்சை அளித்து வந்தார்.

இந்தநிலையில், அவர் மருத்துவம் படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு சிகாரிப்புரா போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிளினிக்கில் சோதனை செய்தனர்.

அப்போது குண்டப்பா மருத்துவம் படிக்காமலேயே கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குண்டப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், குண்டப்பா மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 மாத சிறைதண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.



Next Story