நேற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்பு.. இன்று ராஜினாமா: சிக்கிம் முதல்-மந்திரியின் மனைவி அதிரடி


Sikkim CM wife resigned
x

சிக்கிம் முதல்-மந்திரியின் மனைவி அளித்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டுள்ளார்.

காங்டாக்:

சிக்கிம் சட்டசபை தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

முதல்-மந்திரியின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் பிமல் ராயை தோற்கடித்தார். நேற்று சட்டசபையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.

இந்நிலையில், கிருஷ்ண குமாரி ராய் இன்று திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது. அவரது இந்த திடீர் முடிவுக்கான காரணம் தெரியவில்லை. கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.

முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் அருணாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி பிமா காண்டு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நேரத்தில், அவரது மனைவியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story