30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 1999களில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நபர்களை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகளை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
தோடா மாவட்டம் காட் கிராமத்தைச் சேர்ந்த பிர்தாஸ் அகமது வானி, பாரத் கிராமத்தை சேர்ந்த குர்ஷித் அகமது மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் 1999களில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.