ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா; எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது - சபாநாயகர் அறிவிப்பு


ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா;  எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது - சபாநாயகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2024 6:33 PM IST (Updated: 10 Jan 2024 6:39 PM IST)
t-max-icont-min-icon

ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

சிவசேனா கட்சியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட பிளவின் காரணமாக அக்கட்சியின் தலைமையில் நடைபெற்று வந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார். இதன்பின்னர் சிவசேனாவின் அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினர்.

இந்த அரசியல் நெருக்கடி காலகட்டத்தில் உத்தவ் தாக்கரே அணியில் தலைமை கொறடாவாக இருந்த சுனில் பிரபு ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையாக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு மனு கொடுத்தார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் தகுதி நீக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.

ஆட்சி மற்றும் அரசியல் மாற்றம் நிகழ்ந்து விட்டபோதும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

இந்த வழக்கில் கடந்த மே மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தற்போதைய சபாநாயகர் நியாயமான காலத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததை அடுத்து தகுதி நீக்க மனுக்கள் மீது விரைவாக முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தற்போதைய சபாநாயகர் ராகுல் நர்வேகர் கடந்த 31-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. பின்னர் சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று இந்த காலக்கெடு வருகிற 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் சபாநாயகர் தனது அதிரடி நடவடிக்கையாக சிவசேனா கட்சியின் இரு அணிகளை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் தகுதி நீக்க மனுக்கள் குறித்த தனது விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை அடைந்து விட்டது.

இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் இன்று முடிவை அறிவித்தார்.

இதன்படி ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும் ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்களை 2022-ல் உத்தவ் தாக்கரே நீக்கியதை ஏற்க முடியாது என்றும் ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


Next Story