பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 40 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
பயங்கரவாதி ஷாரிக்
மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்த வழக்கில் கைதான சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா செப்புகுட்டே கிராமத்தை சேர்ந்த ஷாரிக் (வயது 24) பற்றி நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஷாரிக் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேரவும், அந்த அமைப்புக்கு தென் மாநிலங்களான கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்களை சேர்க்க முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் யூ-டியூப் வீடியோக்களை பார்த்து குண்டு தயாரித்து, மங்களூரு, மைசூரு உள்பட பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் அம்பலமாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி
இதனால் அவருக்கு பயங்கரவாத அமைப்பு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு குழுக்களிடம் இருந்து டார்க் வெப் மூலம் பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நிகழ்த்தது தெரியவந்தது. அதாவது டாலர்களில் அந்த பண பரிமாற்றம் ஷாரிக்கின் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. இதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதில் மைசூருவில் தங்கியிருந்த போது தனது அடையாளத்தை மறைத்து மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர் போல் செயல்பட்டு பலருடன் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
40 பேரிடம் விசாரணை
அவ்வாறு தனது நட்பில் சிக்கியவர்களிடம் டாலர்களை கொடுத்து அதை இந்திய ரூபாயாக மாற்றி மீண்டும் தனது வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்தது தெரியவந்தது. இவ்வாறு அவர் மைசூரு, தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்களை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்க பயன்படுத்தியதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக மைசூருவில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் மூலம் டாலர்களை இந்திய ரூபாயாக மாற்றியதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மைசூருவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோரை பிடித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், ஷாரிக் தனது அடையாளத்தை மறைத்து, அவர்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அவர்களிடம் நல்லவர் போல் நடித்து டாலர்களை இந்திய ரூபாயாக மாற்றியதும் தெரியவந்துள்ளது.
ஷாரிக்கிடம் விசாரணை
இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள், குண்டுவெடிப்பில் காயமடைந்து மங்களூரு பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிடமும் விசாரணை நடத்தி தகவல்களை கேட்டறிந்துள்ளனர்.
மேலும் அவரிடம் எந்தந்த நாடுகளில் இருந்து நிதிஉதவி வந்தது, எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி வழங்கினார்கள் உள்பட பல்வேறு தகவல்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் ெவளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.