மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
மங்களூரு குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரமும் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மங்களூரு:
தீவிர சிகிச்சை
கர்நாடக மாநிலம் மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி ஷாரிக் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் கொண்டு சென்ற குக்கர் வெடிகுண்டே ஷாரிக்கிற்கு வினையாக மாறியது. குக்கர் வெடித்து அதன் மேல்மூடி தாக்கியதில் ஷாரிக்கின் தாடை, கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர பேச முடியவில்லை. மேலும் வலது கண்ணையும் திறக்க முடியவில்லை. அத்துடன் குண்டு வெடித்ததில் அவரது கை, கால் விரல்கள் சிதைந்துள்ளன.
வெடிப்பொருள் நெடியை சுவாசித்ததால் ஷாரிக்கின் நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 டாக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் பூரண குணமடைய இன்னும் 25 நாட்கள் ஆகும் எனவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை
இந்த நிலையில் ஷாரிக் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஷாரிக் இளம் வயதாக இருப்பதால், அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாரிக்கின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் முதுகு மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.