இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.4,650 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.4,650 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2024 1:39 PM IST (Updated: 15 April 2024 6:06 PM IST)
t-max-icont-min-icon

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களில் 45 சதவீதம் போதைப்பொருட்கள் எனவும் அதிர்ச்சிகரமான தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தினமும் ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019 தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையை விட இது அதிகம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்களவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்குவதற்கு முன்பே நாடு முழுவதும் ரூ.4,650 கோடிக்கு மேல் அமலாக்கத்துறையினர் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். விரிவான திட்டமிடல், குழுக்களிடையேயான ஒத்துழைப்பு மற்றும் விசாரணை அமைப்புகளின் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

மேலும் இந்த சோதனையில் ரூ.4.43 கோடி அளவில் மதுபானங்களும், ரூ.78.75 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்களும், ரூ.31 கோடி மதிப்பிலான இலவச பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரூ.53 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story