தொழில் அதிபரை ஏமாற்றி மோசடி மூலம் கிடைத்த பணத்தில் சொத்துகள் வாங்கிய மடாதிபதி


தொழில் அதிபரை ஏமாற்றி மோசடி மூலம் கிடைத்த பணத்தில் சொத்துகள் வாங்கிய மடாதிபதி
x

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில் அதிபரை ஏமாற்றி மோசடி செய்ததன் மூலம் கிடைத்த ரூ.1½ கோடியில் மடாதிபதி சொத்துகள் வாங்கி குவித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி தொழில் அதிபரை ஏமாற்றி மோசடி செய்ததன் மூலம் கிடைத்த ரூ.1½ கோடியில் மடாதிபதி சொத்துகள் வாங்கி குவித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

சொத்துகள் வாங்கினார்

உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்த தொழில்அதிபர் கோவிந்தபாபு பூஜாரிக்கு, தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட சீட் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டு இருந்தது. இந்த மோசடி வழக்கில் விஜயநகர் மாவட்டம் ஹூவினகடஹள்ளியில் உள்ள காலு மடத்தின் மடாதிபதி அபினவ காலஸ்ரீயின் பெயர் 3-வது குற்றவாளியாக இடம் பெற்றுள்ளது.

மோசடி மூலம் பறித்த ரூ.5 கோடியில், ரூ.1½ கோடி மடாதிபதிக்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தைக் கொண்டு அவர் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக நிலம், பெட்ரோல் விற்பனை நிலையத்தை மடாதிபதி வாங்கியது தெரியவந்துள்ளது.

பினாமி பெயரில் நிலம்

இந்த சொத்துகள் அனைத்தும் பினாமி பெயரிலேயே அவர் வாங்கி இருக்கிறார். அதன்படி, தனது மனைவியின் தந்தையான மாமனார் பெயரில் ஹூவினகடஹள்ளி அருகே கோலஜி கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு கரும்பு பயிரிட்டுள்ளார். ஹிரேகடஹள்ளி புறநகர் பகுதியில் உள்ள தர்காவையொட்டி ஒரு ஏக்கர் நிலத்தையும், ஹிரேகடஹள்ளி-மாகல ரோட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வீட்டுமனையையும் மடாதிபதி வாங்கி உள்ளார்.

இதுதவிர ஹிரேகடஹள்ளி-ககரனூரு ரோட்டில் உள்ள சந்திரப்பா என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு ரூ.40 லட்சம் கொடுத்து, மடாதிபதி பங்குதாரராக ஆகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் மடாதிபதி அபினவ காலஸ்ரீயை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


Next Story