உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்ததையும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கி உள்ளனர்.
மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் வசிக்கும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த தகவலும் இல்லை என கவர்னர் மறுத்துள்ளார்.