மத்திய அரசின் முக்கிய துறைகளில் செயலர்கள் அதிரடி மாற்றம்
பாதுகாப்புத்துறை உள்பட முக்கிய துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் முக்கியத் துறைகளைச் சோ்ந்த செயலர்களை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமா் அலுவலகத்தின் சிறப்பு செயலராக பணியாற்றி வரும் புன்யா சாலிலா ஸ்ரீவாஸ்தவா, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது சுகாதாரத்துறைச் செயலராக உள்ள ஆபூர்வா சந்திராவின் பதவிக் காலம் அடுத்த மாதம் 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.அதன் பிறகு, புன்யா சாலிலா ஸ்ரீவஸ்தவா பதவியேற்பார். தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத்துறையின் செயலராக உள்ள ராஜேஷ் குமாா் சிங், புதிய பாதுகாப்புத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாதுகாப்புத்துறைச் செயலராக உள்ள அரமனே கிரிதரின் பதவிக்காலம் அக்டோபா் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. அதுவரை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயல் அலுவலராக ராஜேஷ் குமார் சிங் பணியாற்றுவார். இதுதவிர, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை செயலராக உள்ள கதிகிதாலா ஸ்ரீனிவாஸ் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் புதிய செயலராக தீப்தி உமாசங்கரும், நிதி சேவைகள் செயலராக உள்ள விவேக் ஜோஷி மத்திய பணியாளா் துறையின் செயலராகவும் நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராக உள்ள நாகராஜு மத்திராலா நிதிச் சேவைகள் துறையின் புதிய செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டது.