கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடலை 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
தொடர் கனமழையால் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடலை தேடும் பணி 3-வது நாளாக நடந்து வருகிறது. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு செய்தனர்.
சிக்கமகளூரு;
கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுமி
கர்நாடகத்தில் மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் சிக்கமகளூரு தாலுகா ஒசப்பேட்டை அருகே தொகரிஹங்கல் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி சுபரீதா என்பவள், கடந்த 4-ந்தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாள். இதில் உயிரிழந்த சிறுமியின் உடலை தீயணைப்பு படையினர் தேடி வந்தனர். ஆனால் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை.
3-வது நாளாக தேடுதல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் தீயணைப்பு படையினரும், ஆப்தமித்ரா குழுவினரும் ரப்பர் படகு மூலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடலை தேடினார்கள். நீண்ட தூரம் தேடியும் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் சிறுமியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. நேற்றைய மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
சிறுமி அடித்து செல்லப்பட்டதில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை மீட்பு குழுவினர் தேடினர். மேலும் மங்களூருவில் இருந்து நீச்சல் வீரர்கள் 25 பேர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் சிறுமியின் உடல் கிடைக்கவில்லை.
கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா ஆகியோர் மீட்பு பணி நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மீட்பு பணியை முடுக்கிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் சிறுமி சுப்ரீதாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளதாகவும், விரைவில் சிறுமியின் உடல் மீட்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
ஆறுகளில் வெள்ளம்
சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு வருகிறது. ஹேமாவதி, பத்ரா, துங்கா ஆறுகளில் அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூரு மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.