கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் மனு.. நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவார் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு முன்னதாக முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கவர்னர் அழைப்பு விடுத்ததும் அவர் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமந்த் சோரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி மனுவை தாக்கல் செய்தனர்.
அப்போது, கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற உள்ளதாக தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரனின் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்துகிறது.