கொலிஜிய விவகாரம்: மத்திய மந்திரிகள் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
கொலிஜிய விவகாரத்தை பொதுவெளியில் விமர்சிக்ககூடாது, மத்திய மந்திரிகள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதற்கு எதிராக பெங்களூரு வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள், 'கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 19 பெயர்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது போன்ற பல பெயர்கள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இன்னும் எத்தனை நாள் இந்த முரண்பாடு தொடரும்?. நீதிபதிகளின் பெயர்களை ஐகோர்ட்டு கொலிஜியத்துக்கு பரிந்துரைக்கும்போது மூப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்கிறது.
நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜிய முறை நடைமுறையில் இருக்கும் வரை அதை செயல்படுத்த வலியுறுத்த வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக வேறு ஏதேனும் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பினால் அதை யாரும் தடுக்கவில்லை.
எந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும், எந்த சட்டத்தை பின்பற்றக்கூடாது என சமூகத்தின் ஒரு பிரிவினர் முடிவு எடுக்க தொடங்கினால் சிக்கல்கள் உருவாகும். சட்டத்தை பொருத்தவரை அதை மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பு அரசியலமைப்பு சாசனம் கோர்ட்டுக்கு வழங்கி உள்ளது. சட்டத்தை ஏற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. ஏற்றப்படும் சட்டங்கள் கோர்ட்டுகளின் ஆய்வுக்கு உட்பட்டவைதான்.
எந்த ஒரு சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பிறகு அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற தகவலை மத்திய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்' என்று தெரிவித்தனர்.
மந்திரிகளுக்கு கட்டுப்பாடு
மேலும் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை தொடர்பாக பொது வெளி விமர்சனங்களை முன்வைப்பதில் கட்டுப்பாட்டை கடைபிடிக்கும்படி மந்திரிகளுக்கு அறிவுறுத்துங்கள். கொலிஜியம் முறை குறித்து மத்திய மந்திரிகள் வெளியிட்ட கருத்துகள் நல்லவிதமாக பார்க்கப்படவில்லை.
மந்திரிகள் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் தலைமை வக்கீலிடம் நீதிபதிகள் தெரிவித்து, மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண்ரிஜிஜூ கடந்த நவம்பர் 25-ந்தேதி கொலிஜியம் முறை அரசியமைப்பு சாசனத்துக்கு புறம்பாக உள்ளது என்ற கூறியது நினைவுகூரத்தக்கது.