தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்கள்: காலதாமதமாக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கும் உத்தரவுக்கு எதிராக காலதாமதமாக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடைச் சேர்ந்த லட்சுமணன், அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளராக கடந்த 1992-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் சேர்ந்தார். பின்னர் அவரது பணி 2002-ம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டு, 2012-ல் ஓய்வுபெற்றார்.அவருக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க சென்னை ஐகோர்ட்டு கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதற்கு எதிரான மறு ஆய்வு மனுவும் 2022-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஓய்வூதிய பலன்களை அளிக்க ஐகோர்ட்டு 2020-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேல்முறையீட்டு மனு 156 நாட்கள் கழித்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலதாமதத்துக்காக கூறப்பட்ட சட்ட கருத்து, மொழியாக்கம் போன்ற காரணங்கள் ஏற்புடையவையாக இல்லை. மேலும், ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக தூய்மைப் பணியாளரை மேலும் வழக்காட செய்வது தேவையற்றது என கருதி, எச்சரிக்கும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம். இந்த அபராத தொகையை சுப்ரீம் கோர்ட்டு பணியாளர் நலநிதிக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.
காலதாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததற்கு காரணமான அலுவலர்களிடமிருந்து இந்த அபராதத்தொகையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வசூலித்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.