ஆசியன் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா உடன் சனத் ஜெயசூர்யா சந்திப்பு


ஆசியன் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா உடன் சனத் ஜெயசூர்யா சந்திப்பு
x

ஆசியன் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவை சந்தித்து பேசியது, கவுரவம் மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் விசயம் என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்து உள்ளார்.



ஆமதாபாத்,



பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா குஜராத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இலங்கைக்கு கடந்த 3 மாதங்கள் சோதனையாக இருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. பழைய நிலைக்கு நாட்டை கொண்டு வர அரசு மெல்ல முயன்று கொண்டிருக்கிறது.

இலங்கையில் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்கான சரியான தருணமிது. இந்தியாவின், குஜராத்தில் இலங்கையின் சுற்றுலாவை நான் ஊக்கப்படுத்தி வருகிறேன். இதற்காக சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சி ஒன்றை நாங்கள் நடத்தியுள்ளோம். நேற்று ஊர்வலம் ஒன்றையும் நாங்கள் நடத்தியுள்ளோம்.

எங்களது அண்டை நாடாக, நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு உதவி செய்ததில் இந்தியா பெரிய ஒரு பங்கு வகித்தது. அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

இதன்பின்னர், ஆசியன் கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய்ஷாவை, சனத் ஜெயசூர்யா இன்று சந்தித்து பேசினார். இதன்பின்பு டுவிட்டரில் ஜெயசூர்யா வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரிய கவுரவ செயலாளர் மற்றும் ஆசியன் கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய்ஷாவை சந்தித்து பேசியது, கவுரவம் மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் விசயம்.

ஒரு சிறு தகவல் தெரிவிப்புக்கு மதிப்பளித்து எங்களை சந்திக்க ஒப்பு கொண்டதற்காக நன்றி சார். நாங்கள் இலங்கையில் கிரிக்கெட் பற்றிய சில முக்கிய விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த சந்திப்பு நல்ல முறையில் இருந்தது. இந்த சந்திப்பில் முழுவதும் கிரிக்கெட்டை பற்றிய சில விசயங்களை விவாதித்தோம். ஆசிய கோப்பை போட்டிகள் துபாயில் நடக்கின்றன. அதனால், இலங்கைக்கு என்ன பலன்கள் கிடைக்க போகின்றன. இது நல்ல முறையில் நடந்த சந்திப்பு என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

முதலில், ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற இருந்தன. எனினும் அந்நாட்டில் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பு, போராட்டம் மற்றும் வன்முறையால் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டு உள்ளன.

எனினும், இலங்கையில் போட்டிகளை நடத்துவதற்காக, முடிந்த வரையிலான முயற்சிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டது என ஜெயசூர்யா கூறியுள்ளார். வருங்காலத்தில் போட்டி தொடரை இலங்கையில் நடத்துவதற்கான வழிகளை காண்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story