முஸ்லிம்கள் அதிகரித்து விட்டதால் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்: சமாஜ்வாதி எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று சமாஜ்வாடி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மெகபூப் அலி. முன்னாள் மந்திரியான இவர், பிஜ்னோரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மெகபூப் அலி கூறியதாவது:-
"உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி முடிவுக்கு வரும். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர் என்பதை நாட்டை எரித்து வருவோர் உணர வேண்டும். மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்" என்றார். மெகபூப் அலியின் இந்தப் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக பாஜக பொதுச்செயலாளர் சுப்ரத் பதக் கூறுகையில், "எம்எல்ஏவின் இந்தக் கருத்து சமாஜ்வாதி கட்சிபதிலளிக்க வேண்டிய பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்காகத்தான் அகிலேஷ் யாதவ் இந்துக்களை பிளவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கிறாரா? இதனால் குறிப்பிட்ட சமூகத்தின் விருப்பம் நிறைவேறுமா? நாடு மாறிவிட்டது என்பதை அகிலேஷ் நினைவில் கொள்ள வேண்டும்' என்றார்.