தாமதமாக கொடுப்பதாக குற்றச்சாட்டு: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 1-ந் தேதியே சம்பளம் - கர்நாடக அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் அரசு பஸ் ஊழியர்களுக்கு 1-ந் தேதியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சம்பளம் தாமதமாக வழங்குவதாக குற்றச்சாட்டு கூறி வந்ததால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெங்களூரு:
ஊழியர்கள் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்கு பின்பு பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் சமீபத்தில் மாத கணக்கில் சம்பளம் பாக்கிவைத்து வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்தந்த மாதத்தில் சம்பளம் வழங்கப்பட்டாலும், சரியான தேதியில் சம்பளம் வழங்கப்படாமல் காலதாமதமாக வழங்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக போக்குவரத்து ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தங்களது குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சரியான நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கூறி வந்தனர்.
1-ந் தேதியே சம்பளம்
இந்த நிலையில், கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் 1-ந் தேதியே சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, மாதந்தோறும் ஒரு நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. விபத்துகள் ஏற்படாமல் பஸ்களை டிரைவா்கள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.