மருத்துவமனையில் `சத்குரு'.. ஜக்கி வாசுதேவ் நிலை என்ன..? குரல் நடுங்க பேசும் பரபரப்பு வீடியோ


மருத்துவமனையில் `சத்குரு.. ஜக்கி வாசுதேவ் நிலை என்ன..? குரல் நடுங்க பேசும் பரபரப்பு வீடியோ
x
தினத்தந்தி 20 March 2024 7:47 PM IST (Updated: 20 March 2024 7:52 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா ஈஷா மையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தார். மேலும் நடிகர், நடிகைகள் உள்பட பல துறை பிரபலங்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சூழலில் தலைவலி காரணமாக ஜக்கி வாசுதேவ், டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளையில் ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மகாசிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சில நாட்களுக்கு முன்பு சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.





Next Story