டெல்லியில் அதிஷிக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பதா? ஆளுங்கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு


டெல்லியில் அதிஷிக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பதா? ஆளுங்கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
x

பயங்கரவாதி அப்சல் குருவை தூக்கிலிடுவதை தடுக்க அதிஷியின் குடும்பத்தினர் போராடியதாக ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சனம் செய்தார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுமார் 6 மாதத்திற்கு பிறகு ஜாமீன் கிடைத்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று மாலை கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளார்.

இதற்கிடையே ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் அவர் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டெல்லிக்கு இன்று மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள். பயங்கரவாதி அப்சல் குருவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அதிஷியின் குடும்பத்தினர் நீண்ட காலமாக போராடினர். அவர் அப்பாவி என்றும், அவரை தூக்கிலிடக்கூடாது என்றும், அரசியல் சதியால் பாதிக்கப்பட்டவர் என்றும், குடியரசுத் தலைவருக்கு அவரது பெற்றோர்கள் கருணை மனுக்கள் அனுப்பினர். இது எவ்வளவு தவறு தெரியுமா?

இப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த அதிஷி, டெல்லியின் முதல்வராகப் போகிறார். ஆனால் அவர் ஒரு "டம்மி முதல்வர்" என்று நமக்கு தெரியும். அவர் முதல்-மந்திரியாக இருப்பது பெரிய பிரச்சினை. ஏனென்றால் இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் டெல்லியின் பாதுகாப்புடன் தொடர்புடையது. கடவுளே.. இவரைப் போன்ற முதல்-மந்திரியிடம் இருந்து டெல்லி மக்களை காப்பாற்றுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தைத் தொடர்ந்து ஸ்வாதி மாலிவாலுக்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

"ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பா.ஜ.க.வின் கருத்தை கூறுகிறார். அவருக்கு கொஞ்சமாவது ரோஷம் இருந்தால், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் பாதையை தேர்வு செய்ய வேண்டும்" என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் திலிப் பாண்டே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


Next Story