பெண்களுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனுமதி இல்லை - கேரள அரசு


பெண்களுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனுமதி இல்லை - கேரள அரசு
x

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசு பிறப்பித்த உத்தரவு வாபஸ் ஆனது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களும்தான் அனுமதிக்கப்படுகின்றனர்; 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது பல்லாண்டு காலம் பின்பற்றி வருகிற நடைமுறை.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வயது வித்தியாசமின்றி அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தீர்ப்பு அளித்தது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுஆய்வு மனு நிலுவை

தீர்ப்பைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற இளவயது பெண்கள் தடுக்கப்பட்டனர். அவர்களும், அவர்களுக்கு எதிராக அய்யப்ப பக்தர்களும் போராட்டங்கள் நடத்த பதற்றம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது. அதன் விசாரணை நிலுவையில் உள்ளது.

நடை திறப்பு

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல மகர விளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாலும், கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு விட்டதாலும், இந்த ஆண்டு 40 முதல் 50 சதவீதம் வரை பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றும் பெருமழைக்கு மத்தியிலும் பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

மாநில அரசு உத்தரவு

இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பக்தர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய உத்தரவு கையேட்டை கேரள மாநில இடதுசாரி அரசு வழங்கியது.

இந்த கையேட்டில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி அனைத்து பக்தர்களும் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

அதாவது, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற பழைய மரபுப்படி இன்றி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புபடி அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று உணர்த்தப்பட்டுள்ளது.

சர்ச்சை

இந்த உத்தரவு, அங்கு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறுகையில், " சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்கள் குறித்தும் நேரடியாகக் குறிப்பிடாமல், கையேட்டில் அனைத்து பக்தர்களும் நுழையலாம் என்ற உத்தரவின் பின்னணியில் இடதுசாரி அரசுக்கு ஏதேனும் குறிப்பிட்ட நோக்கம் இருந்தால், அதைத் தட்டிக் கழிப்பது நல்லது. அரசின் முடிவு, சபரிமலையை மீண்டும் போர்க்களமாக்கி, பக்தர்களை குறிவைப்பதுதான் என்றால், நாங்கள் கடந்த காலத்தை மறந்து விடவில்லை. அரசு அந்த விஷயங்களில் இருந்து பின்வாங்கிவிட்டது. நீங்கள் மீண்டும் அப்படி வருகிறீர்கள் என்றால், இது கடினமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதைத்தான் நாங்கள் சொல்ல முடியும். இத்தகைய முடிவில் இருந்து அரசு பின்வாங்கி விடுவது நல்லது" என எச்சரித்தார்.

வாபஸ்

சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கேரள அரசு இதில் பின்வாங்கி விட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்படும் என கூறி விட்டது. இந்த விவகாரம் குறித்து கேரள தேவசம் போர்டு மந்திரி கே.ராதாகிருஷ்ணன், சபரிமலையில் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் அரசுக்கு தவறான நோக்கம் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் நல்ல நோக்கத்துடன்தான் செய்துள்ளோம். வழிகாட்டும் நெறிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை திரும்பப்பெறப்படும். போலீசாருக்கு வழங்கப்பட்ட கையேடு ஏற்கனவே அச்சிட்டதாகும். அதைத் திரும்பப்பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி, கேரள கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அஜித் குமார் கூறும்போது, "சபரிமலை அய்யப்பன்கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்பட்ட கையேட்டில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட்டு புதிய கையேடு வழங்கப்படும். பழைய புத்தகத்தை நகல் எடுத்து அச்சிட்டதால் தவறு நேர்ந்தது. இது தவிர வேறு சில தவறுகளும் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே அந்த கையேட்டினை திரும்பப்பெறவும், புதிய கையேட்டினை வழங்கவும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்" என தெரிவித்தார்.

எனவே சபரிமலை அய்யப்பன் கோவிலில் பழைய நடைமுறைப்படி 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்தான் அனுமதிக்கப்படுவார்கள், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல முடியாது.


Next Story