மும்பை விமான நிலையத்தில் ரூ.13.56 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்; 11 பயணிகள் கைது
கைது செய்யப்பட்ட ஒருவரின் மலக்குடலில் இருந்து மெழுகு வடிவில் தங்கத்தூசி கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விமான நிலையத்தில் கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடையே சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது, 20 தங்கம் கடத்தல் வழக்குகளில் 11 பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களிடம் இருந்து ரூ.13.56 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்க கட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களின் உள்ளாடைகள், பெல்ட் மற்றும் வளையல் ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் கட்டிகள் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த கடத்தில் கைது செய்யப்பட்ட 11 பயணிகளில் ஒருவரின் மலக்குடலில் இருந்து மெழுகு வடிவில் தங்கத்தூசி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் மலக்குடலில் இருந்த தங்கத்தூசியை மருத்துவரின் உதவிவுடன் கைப்பற்றப்பட்டது என்றார்.