மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து: 1,040 பேர் பலி; மத்திய அரசு தகவல்


மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து: 1,040 பேர் பலி; மத்திய அரசு தகவல்
x

மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து ஏற்படுத்தியதில் 1,040 பேர் பலியாகி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


நாட்டில் 2021-ம் ஆண்டில் மொபைல் போன் பயன்படுத்தியபடி வாகனத்தில் சென்று ஓட்டுனர்கள் 1,997 சாலை விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களால் 1,040 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற பெயரிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் சிவப்பு நிற விளக்கு எரியும்போது, கடந்து சென்று சாலை விபத்து ஏற்படுத்திய எண்ணிக்கை 555 என்றும், அதில் 222 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சரியாக செப்பனிடப்படாமல் குண்டும், குழியும் ஆக காணப்படும் சாலைகளால் ஏற்பட்ட விபத்துகள் 3,625 என்றும் அதில் 1,481 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டில் மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளது என்றும் அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்தும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயமடைந்தும் உள்ளனர்.


Next Story