ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் எல்.ராம்தாஸ் காலமானார்


ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் எல்.ராம்தாஸ் காலமானார்
x

இந்தியா-பாகிஸ்தான் போரின்போது ஐ.என்.எஸ். பியாஸ் கடற்படை கப்பலின் கமாண்டராக எல்.ராம்தாஸ் பணியாற்றினார்.

ஐதராபாத்,

இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல்.ராம்தாஸ், செகந்தராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

அட்மிரல் எல்.ராம்தாஸ், கடந்த 1990 முதல் 1993 வரை இந்திய கடற்படையின் தளபதியாக பதவி வகித்தார். மராட்டிய மாநிலம் மட்டுங்காவில் கடந்த 1933-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி பிறந்த எல்.ராம்தாஸ், தனது தொடக்க கல்வியை டெல்லியில் பயின்றார்.

தொடர்ந்து 1949-ம் ஆண்டு டேராடூன் கிளெமென்ட் டவுனில் உள்ள ஆயுதப்படை அகாடமி சேர்ந்த எல்.ராம்தாஸ், 1953-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் பணியமர்த்தப்பட்டார். இவர் தனது பணிக்காலத்தின்போது கொச்சி கடற்படை அகாடமியை நிறுவியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.

மேலும் 1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய ஐ.என்.எஸ். பியாஸ் கடற்படை கப்பலின் கமாண்டராக எல்.ராம்தாஸ் பணியாற்றினார். இந்த போரில் அவரது துணிச்சலான செயல்களைப் பாராட்டி, மராட்டிய அரசு அலிபாக் பகுதியில் அவருக்கு நிலம் வழங்கி கவுரவித்தது.

இதையடுத்து ஓய்வு பெற்ற பிறகு அட்மிரல் ராம்தாஸ், தனது மனைவி லலிதாவுடன் அலிபாக் பகுதியில் குடியேறினார். அங்கு அவரும், அவரது மனைவியும் இயற்கை விவசாயம் மற்றும் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மேலும் அட்மிரல் எல்.ராம்தாஸ், ஓய்வு பெற்ற பிறகு சிறுபான்மை சமூகங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story