கோவேக்சின் பக்கவிளைவுகள் குறித்த ஆய்வறிக்கை - ஐ.சி.எம்.ஆர். கண்டனம்


ICMR Condemns Research Paper on Covaxin
x

கோவேக்சின் பக்கவிளைவுகள் குறித்த ஆய்வறிக்கைக்கு ஐ.சி.எம்.ஆர். கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து நாடு முழுவதும் வழங்கியது. அதே சமயம், கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்தது.

இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை சரிவு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்து கோர்ட்டில் தெரிவித்தது. அத்துடன் சந்தைகளில் இருந்தும் அந்த தடுப்பூசி திரும்பப்பெறப்பட்டது.

இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசி குறித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 3-ல் ஒரு பங்கினருக்கு பல்வேறு வகையான எதிர்மறை விளைவு ஏற்பட்டதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் பாதியளவு பேருக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு சதவீத நபர்களுக்கு பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் ஆய்வறிக்கைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்.) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு பிழையானது என்றும், கோவேக்சின் செலுத்தியதால்தான் இந்த பக்கவிளைவுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்தவொரு தரவுகளும் இல்லை என்றும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் தொலைபேசி மூலம் கேள்வி கேட்டு, ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாதது தவறான அணுகுமுறை என்றும் ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது. மேலும் பக்க விளைவுகள் பற்றிய வரைமுறைகள், உலகளாவிய வரைமுறைகளுக்கு முரணாக இருப்பதாக ஐ.சி.எம்.ஆர். சுட்டிக்காட்டியுள்ளது.


Next Story