ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது - ரெயில்வே மந்திரி தகவல்
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரெயில்வே மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது. இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், "பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், மாவட்ட நிர்வாகம், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒரே குழுவாக பணியாற்றி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் அறை இயங்குகிறது. மீட்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகு உடனடியாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.