வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தாலே அதை 'லவ்ஜிகாத்' என கூற முடியாது - மும்பை ஐகோர்ட்டு


வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தாலே அதை லவ்ஜிகாத் என கூற முடியாது - மும்பை ஐகோர்ட்டு
x

வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் காதலித்தாலே அதை 'லவ்ஜிகாத்' என கூறமுடியாது என ஐகோர்ட்டு கூறியுள்ளது.

முன்ஜாமீன் மனு

அவுரங்காபாத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். திருமணத்தின் போது அந்த பெண் வாலிபரை இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாலிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இளம்பெண் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பெண், குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை அவுரங்காபாத் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர்கள் முன்ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் முறையீடு செய்தனர். மனுவை நீதிபதிகள் விபா கன்கான்வாடி, அபய் வாக்வாசே விசாரித்தனர்.

'லவ்ஜிகாத்' என கூறமுடியாது

அப்போது வாலிபர் தரப்பில் ஆஜரான வக்கீல் பெண், குடும்பத்தினருக்கு முன்ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தார். இது 'லவ்ஜிகாத்' வழக்கு என கூறினார். .நீதிபதிகள் வாலிபர் தரப்பு 'லவ்ஜிகாத்' வாதத்தை ஏற்க மறுத்தனர். அவர் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் காதலித்தாலே அதை 'லவ்ஜிகாத்' என கூற முடியாது என்றனர்.

இதுதொடர்பாக நீதிபதிகள், "வாலிபர், பெண்ணை காதலித்ததாகவும் அவரை எந்த சூழ்நிலையிலும் கைவிட விரும்பாமல் இருந்ததாக கூறியுள்ளார். ஆணும், பெண்ணும் வெவ்வேறு மதம் என்பதால் அதை மத கோணத்தில் பார்க்க வேண்டும் என்று இல்லை. இது உண்மையான காதலாக கூட இருக்கலாம். தற்போது அதற்கு 'லவ்ஜிகாத்' சாயம் பூச முயற்சி செய்யப்படுவது போல தெரிகிறது" என கூறி பெண், அவரது குடும்பத்தினருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.


Next Story