அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடைமுறைகள் சில நாட்களில் துவங்கும்: ராஜ்நாத்சிங் அறிவிப்பு
அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையிலும், இந்த திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைமுறைகள் சில நாட்களில் துவங்கும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கு தீ வைப்பு என சில மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.
அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் சில நாட்களில் துவங்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ராஜ்நாத்சிங் டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- " கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ ஆள்சேர்ப்பு நடைமுறைகள் இல்லாததால், ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு இளைஞர்களுக்கு கிட்டவில்லை. எனவே, இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, பிரதமரின் அறிவுறுத்தல் பேரில் அக்னி வீரர்களுக்கான வயது வரம்பு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு எடுத்த நடவடிக்கைக்காக பிரதமரை நான் மனதார பாராட்டுகிறேன். ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நடைமுறைகள் சில நாட்களில் தொடங்க உள்ளது. எனவே, அதற்கு தயாராகுமாறு நான் இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
வடமாநிலங்களில் தீவிரம் அடையும் போராட்டம்
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் "அக்னிபாத்" திட்டத்தை பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது. இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பீகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் நேற்று முன்தினத்தில் இருந்து போராட்டத்தில குதித்தனர். மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. நேற்று பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
பீகாரில் இளைஞர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. அவர்கள் ரெயில்களுக்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. டயர்களை தீ வைத்து கொளுத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. ரெயில்கள் தாக்கப்பட்டதால் பல ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் காயம் அடைந்தார். பீகாரில் உள்ள ஜகான பாத், பக்சர், கதிகார், போஜ்பூர், கைமூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் பொதுமக்கள் காயம் அடைந்தனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, ஜம்மு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.
இன்றும் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இன்று மேலும் 4 ரெயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பீகார் மாநிலம் லக்கிசராய் ரெயில் நிலையத்தில் இளைஞர்கள் ஜம்முதாவி-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்தனர். அந்த ரெயிலின் 2 பெட்டிக்கு கும்பல் தீ வைத்தது. இதில் தீ மளமளவென்று பரவியது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதே போல் சமாஸ்டிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை தீ வைத்தனர். இதேபோல ஆரா பகுதியில் உள்ள குகாதியா ரெயில் நிலையத்திலும் ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது. பீகாரில் 3 ரெயில்களில் 20 பெட்டிகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது.
வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் தென் மாநிலங்களுக்கும் பரவியது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் இன்று ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது. செகந்திராபாத் ரெயில் நிலையத்துக்குள் மிகப்பெரிய கும்பல் நுழைந்தது. அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரெயில் நிலையத்தை அடித்து உடைத்து சூறையாடினார்கள். ரெயில் நிலையத்தில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அங்கு நின்ற பயணிகள் ரெயிலின் பார்சல் பெட்டிக்கு தீவைத்தனர். பீகாரில் உள்ள பிகியா ரெயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து ரெயில்களை மறித்தனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 ரெயில்வே ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதே போல் பீகாரின் பல நகரங்களிலும் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தனர். பீகார் மாநில துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு பெட்டியா நகரில் உள்ளது.
அவரது வீடு மீது தாக்குதல் நடந்தது. ஏராளமான இளைஞர்கள் திரண்டு அவரது வீட்டை அடித்து நொறுக்கினார்கள். இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி ரேணுதேவி மகன் கூறும்போது, 'எங்களது வீடு பெட்டியாவில் உள்ளது. இந்த வீடு கடுமையாக சேதம் அடைந்தது. அவர் (ரேணு தேவி) தற்போது பாட்னாவில் உள்ளார்' என்றார். இதேபோல பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளும் தாக்கப்பட்டன. இதே போல பா.ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று போராட்டம் நீடித்தது. உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பல் ரெயில் நிலையத்தை அடித்து உடைத்து சூறையாடியது.அங்கு நின்ற ரெயிலையும் அவர் தாக்கினார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த கும்பல் ரெயில் நிலையத்தை சூறையாடி விட்டு சென்றது. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாலையில் இருந்தே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்களை கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ்கள் சேதம் அடைந்தன. அரியானா மாநிலம் பில்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையானது. அதிக அளவில் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வன்முறை காரணமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் சில இடங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது.