ராமர் கோவில் கும்பாபிஷேகம்: 5 நாட்கள் வீடுகளிலேயே இருக்கும்படி முஸ்லிம் தலைவர் சர்ச்சை பேச்சு
அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் என கூறினார்.
பார்பெட்டா,
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அசாமில் பார்பெட்டா நகரில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைப்பின் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான பத்ருதீன் அஜ்மல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரும் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை முஸ்லிம்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். ராமஜென்ம பூமியில் நிறுவப்படும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும். லட்சக்கணக்கான மக்கள் பஸ்களிலும், ரெயில்களிலும், விமானங்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் பயணம் மேற்கொள்வார்கள்.
நாம் அமைதி காக்க வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.
இந்த காலகட்டத்தில், நாம் பயணம் செய்யாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். பா.ஜ.க. பெரிய திட்டங்களை வைத்திருக்கிறது. முஸ்லிம்களின் பெரிய எதிரியாக பா.ஜ.க. உள்ளது. நம்முடைய வாழ்க்கை, நம்பிக்கை, மசூதிகள், இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் ஆசன் ஆகியவற்றுக்கு எதிரியாக உள்ளது என்று அவர் பேசியுள்ளார்.