ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்: அயோத்தி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பக்தர்கள் கூட்டத்தை கையாளுவது தொடர்பாக அதிகாரிகளுடன் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அயோத்தி,
அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்துக்காக கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்கள் ராம பிரானை தரிசித்து வருகின்றனர்.
இதில் முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 5 லட்சம் பக்தர்கள் ராமபிரானை தரிசித்தனர். அன்று மாலையில் கோவில் கருவறையில் குரங்கு ஒன்று நுழைந்தது. அப்போது அங்கே இருந்த பக்தர்களும், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த காவலர்களும் ராமபிரானை தரிசிக்க அனுமார் வந்திருப்பதாக மெய்சிலிர்த்தனர்.
இந்த வீடியோ காட்சிகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது.
அதில், 'ராமர் கோவிலில் செவ்வாய்க்கிழமை ஒரு அழகான சம்பவம் நடந்தது. கோவிலின் தெற்கு வாசல் வழியாக கருவறைக்குள் ஒரு குரங்கு நுழைந்து ராம பிரானின் சிலை அருகே சென்றது. அது சிலையை கீழே தள்ளிவிடலாம் என கருதிய காவலர்கள், அதை விரட்ட முயன்றனர். காவலர்களை கண்டதும் அது வடக்கு வாசல் வழியாக அமைதியாக சென்றது. பின்னர் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் கிழக்கு வாசல் வழியாக வெளியே சென்றது' என கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராமர் கோவிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காலையிலேயே ராமபிரானை தரிசிக்க வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் நேற்று பிற்பகல் வரை கோவிலில் தரிசனம் செய்திருப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் கூட்டத்தை கையாளுவதற்கும் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதில் முக்கியமாக, சுல்தான்பூரில் இருந்து அயோத்தி செல்லும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதற்கிடையே ராமர் கோவிலுக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கையாளுவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கோவிலுக்கு வரும் முக்கிய பிரபலங்கள் மாநில அரசு அல்லது ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும் அயோத்திக்கு வரும் கூடுதல் தனியார் பஸ்களை நிறுத்துவது குறித்து பரிசீலிக்குமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.