ரக்சாபந்தன்: வாடிக்கையாளர்களை கவர ரூ.5 லட்சம் மதிப்புள்ள ராக்கிகள் விற்பனைக்கு தயார்
ரக்சாபந்தனை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள ராக்கிகள் சூரத் நகர கடையில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
சூரத்,
சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் ரக்சாபந்தன் தினம் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாட பெறுகிறது.
இந்த நாளில், தனது சகோதரரின் மணிக்கட்டில் சகோதரி ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். சகோதரர் தன்னை பாதுகாப்பார் என்ற உறுதிமொழியையும் சகோதரி பெற்று கொள்வார். இதற்கு பதிலாக, ஓர் உறுதிமொழியுடன் சகோதரரும், தனது சகோதரிக்கு சில பரிசுகளை வழங்குவார்.
இதனை கவனத்தில் கொண்டு குஜராத்தின் சூரத் நகரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ராக்கிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி நகை கடையின் உரிமையாளர் தீபக் பாய் சோக்சி என்பவர் கூறும்போது, நாங்கள் தயாரித்த இந்த ஆபரணங்களை ரக்சாபந்தனுக்கு பின்னரும் அணிந்து கொள்ளலாம்.
இந்த புனித திருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் புதுமையான வழியில் கொண்டாட முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார். இதுபற்றி உள்ளூர் வாடிக்கையாளரான சிம்ரன் சிங் கூறும்போது, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் ஆன வெவ்வேறு ராக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நகை கடையில் ரூ.400 முதல் ரூ.5 லட்சம் வரையிலான ராக்கிகள் தயாரிக்கப்படுகின்றன என கூறியுள்ளார். ஒரு ராக்கியின் விலை ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது என அறிந்து வாடிக்கையாளர்கள் பலர் அதனை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.