அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு பதில்


அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு பதில்
x

‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மாநிலங்களவையில் தி.மு,.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி எழுப்பியிருந்தனர்.

புதுடெல்லி,

நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மாநிலங்களவையில் தி.மு,.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி கௌஷல் கிஷோர் அளித்த பதில்:

எழுப்பிய கேள்விக்கு நிலம் மற்றும் குடியிருப்புகள் அமைப்பது போன்றவை மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டவை. ஆனாலும் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்களுக்கு துணை நிற்கிறது.

இதன் ஒரு அங்கமாக பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்படுகிறது.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி, நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு தனி வீடு கட்டவும், கூட்டாக சேர்ந்து வீடு கட்டவும், குடிசைப் பகுதிகளை மேம்படுத்தவும் மானியம் அளிக்கப்படுகிறது.

இதுதவிர, மானியத்துடன் கூடிய கடன் வசதியும் செய்து தரப்படுகிறது.

இந்தக் கடன் வசதித் திட்டத்தை செயல்படுத்த பிரத்யேக ஏஜென்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய, பழைய வீட்டை வாங்கவும், புதிதாக வீடு கட்டவும் தேவைப்படும் நிதி இந்த ஏஜென்சி மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநில அரசிடம் இருந்தும் பயனாளிகள் பட்டியல் பெறப்பட்டு, அது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையும் பெறப்பட்ட பின், உரிய ஆய்வுகளுக்குப் பின், 40%, 40%, 20% என மூன்று கட்டங்களாக மாநில அரசுகள் மூலமாக பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதன்படி தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு இதுவரை 6.88 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6.30 லட்சம் வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, அதில் 4.81 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த 11,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 8,644 கோடி ரூபாய் நிதி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் இந்த வீடுகளைக் கட்டி முடிப்பய்தை உறுதி செய்யும்படி தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ச்சியான கால இடைவெளியில் நேரிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்தத் திட்டம் கண்கணிக்கப்படுகிறது.

பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் தற்போதைய திட்டங்களுக்கான கால வரையறை டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்படுள்ளது. அதற்குள் திட்டமிட்டபடி நாடு முழுக்க வீடுகள் கட்டிமுடிக்கப்படுவதை இந்த அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்தும் என்றார்.


Next Story