ராஜஸ்தானில் தலித் சிறுவன் சாவு: வன்முறை ஏற்படலாம் என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை
இந்த சம்பவத்தால் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தலாம் என்றும் மாநில உளவுத்துறை அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.
9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அவன் உயிரிழந்தான்.
இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கணடனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தால் தலித் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேதனையடைந்துள்ளதாகவும், அவர்கள் பெரும் அளவில் போராட்டம் நடத்தலாம் என்றும் மாநில உளவுத்துறை (ஐபி) அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
வாட்ஸ்ஆப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் சிறுவன் மரணத்திற்கு ஆதரவாக பல கருத்துக்கள் பதிவிடப்பட்டன. தலித்துகள் தாக்குதலால் கோபமடைந்துள்ளனர் மற்றும் அரசாங்கத்தின் திறமையின்மைக்கு தங்கள் எதிர் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
உளவுத்துறை விடுத்த இந்த எச்சரிக்கைக்குப் பிறகும், ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் நிலைமை மோசமடைந்தது. அங்கு தலித் சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல ஆதரவாளர்களுக்கும் போலீசுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது.
போலீஸ் அதிகாரிகள் மீது உள்ளூர் மக்கள் கற்களை வீசத் தொடங்கினர்.கோபமடைந்த உள்ளூர்வாசிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் இறந்த சிறுவனின் தந்தை மற்றும் பிற உறவினர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.