கர்நாடகத்தில் தொடர் கனமழைக்கு 100 வீடுகள் இடிந்தன
கர்நாடகத்தில் தொடர் கனமழைக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தொடர் கனமழைக்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் போதிய மழை பெய்யவில்லை. இந்தநிலையில் தற்போது மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா, குடகு, வடகர்நாடக மாவட்டங்களான பெலகாவி, கதக், கலபுரகி, பாகல்கோட்டை, ஹாவேரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் மாநிலத்தில் உள்ள காவிரி, கிருஷ்ணா, குமாரதாரா, பல்குனி, நேத்ராவதி, துங்கா, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா, கட்டபிரபா, பயஸ்வினி, காளி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலங்கள் இடிந்தது
தட்சிண கன்னடா மாவட்டத்தில் 20-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன. மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தது. மின்வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
மேலும் குமாரதாரா, நேத்ராவதி நதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குக்கேசுப்பிரமணியா, தர்மஸ்தலா கோவில்களை மழை நீர் சூழ்ந்தது. கோவில்களுக்கு வர கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்து இருக்கிறது. மேலும் கோவிலையொட்டிய ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்தாடி மலைப்பகுதியில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பண்ட்வாலில் பெய்த கனமழையால் லொரேட்டோ பகுதியில் 50 ஆண்டு பழமையான பாலம் இடிந்து விழுந்தது.
கடல் சீற்றம் அதிகரிப்பு
அரபிக்கடல் பகுதியில் தொடர்ந்து சூறைகாற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. உடுப்பி மாவட்டம், கார்கலா, முருடேஸ்வர், காபு ஆகிய இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் தரைப்பாலங்கள், சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. ஆபத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தி இருக்கிறது. தட்சிண கன்னடா, உடுப்பியில் 3 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகன்னடா மாவட்டத்தில் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரிகள் நிரம்பி வழிகிறது. முக்கிய சாலைகளில் உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உப்பள்ளியில் பெய்த மழையால் கோவாவிற்கு செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் உப்பள்ளி-கோவா இடையேயான வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
பாகமண்டலா, தலக்காவிரியில் கனமழை
குடகு மாவட்டத்தில் நேற்று மழை கொட்டியது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 48.50 மில்லி மீட்டர்(மி.மீ.) மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாக மடிகேரியில் 74.20 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இதனால் பாகமண்டலா, தலக்காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சம்பாஜே, நாபொக்லு, நெல்லுதுக்கேரி, பெட்டதகாடுவில் மழையால் 10-க்கும் ேமற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
முல்லையன்கிரியில் மண்சரிவு
சிக்கமகளூருவில் கடந்த 16 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் மண்சரிவு அதிகரித்துள்ளது. நேற்று முல்லையன்கிரி மலைப்பாதையில் மேலும் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்த போலீசார், வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். இதேபோல் சந்திரதிரிகோண மலைப்பாதைக்கு செல்லும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. கொப்பா தாலுகாவில் காபி தோட்டத்திற்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஏராளமான காபி செடிகள் நாசமானது. சக்கராயப்பட்டணா அருகே உள்ள ஒசசித்தரஹள்ளி பகுதியில் காயல்லா ஓடையில் மழைநீர் வழிந்தோடி வருகிறது. இந்தநிலையில் தோட்டத்திற்கு சென்ற தேவம்மா (வயது 62) என்ற மூதாட்டி ஓடையில் கால்தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதேபோல துங்கா, பத்ரா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஆற்றுப்பகுதியையொட்டிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்து வருகின்றனர். இதேபோல கனமழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததுடன், வீடுகளும் இடிந்து விழுந்தது. இதனால் சிக்கமகளூருவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ெபண் சாவு
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் பெய்த பலத்த மழையால் சாமுண்டிநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த சச்சின் என்பவரின் வீட்டின் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல அரிசிகெரே தாலுகாவில் பெய்த மழையில் கவுரம்மா(62) என்பவர் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். அவரது கணவர் நாகராஜ் படுகாயம் அடைந்தார்.
சிவமொக்காவில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பெய்தது. விளை நிலத்திற்குள் மழை நீர் புகுந்ததால் விவசாய பயிர்கள் நாசமானது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் மீது விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. சாலைகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
ஆற்றில் மிதந்து வந்த பிணம்
மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பாகல்கோட்டையிலும் பலத்த மழை பெய்தது. மேலும் கட்டபிரபா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கட்டபிரபா ஆற்றில் நேற்று 50 வயது மதிக்கதக்க ஒருவரின் பிணம் மிதந்து வந்தது. இதைப்பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தொடர் மழையால் கர்நாடகா-மராட்டிய எல்லைக்குட்பட்ட பகுதியில் 44 வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல ஜமகண்டியில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலோர மாவட்டத்திற்கு 'சிவப்பு அலர்ட்'
இதேபோல வடகர்நாடக மாவட்டமான பெலகாவி, கதக், கலபுரகி, விஜயநகர், ஹாவேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் மேலும் சில நாட்கள் இந்த கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு 'சிவப்பு அலர்ட்' எச்சரிக்கையும், மலைநாடு மாவட்டத்திற்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.