காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ரெயில் பயணிகள் படுக்கை வசதி பெற உதவும் புதிய கருவி..!!
ஓடும் ரெயில்களில் கையடக்க புதிய கருவியால், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் பயணிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் பேர் படுக்கை வசதியை பெற்று வருகிறார்கள்.
புதுடெல்லி,
எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் பயணிகள், தங்களுக்கு படுக்கை வசதி பெறுவதற்கு டிக்கெட் பரிசோதகர்களை நாடுவது வழக்கம். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பெற்றிருந்த பயணிகள், கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தால், அதை டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் தெரிந்து கொண்டு அவர்களது அனுமதியுடன் அந்த படுக்கை வசதியை பெறுவார்கள்.
இப்படி படுக்கை வசதி பெறுவதில், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. முறைகேடுகளுக்கும் வழிவகுத்தது. டிக்கெட் பரிசோதகர்கள், காகித வடிவ முன்பதிவு பயணிகள் பட்டியல் வைத்திருப்பதால், கடைசி நேரத்தில் ரத்து செய்தவர்களை பற்றிய விவரங்களும் அவர்களிடம் முழுமையாக இல்லாமல் இருந்தது.
புதிய கருவி
இவற்றுக்கு தீர்வாக, டிக்கெட் பரிசோதனைக்கென புதிய கையடக்க கருவி ஒன்று 4 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபாட் வடிவத்தில் அது இருக்கிறது. அதில், முன்பதிவு பயணிகள் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
மேலும், பயணிகள் முன்பதிவு சேவையின் மத்திய சர்வருடன் அந்த கருவிகள் இணைக்கப்பட்டு இருப்பதால், கடைசி நேரத்தில் ரத்து செய்த பயணிகளின் படுக்கை விவரங்களை அந்த கருவி உடனுக்குடன் பதிவேற்றி விடும்.
எனவே, காகித வடிவ பட்டியலை பார்ப்பதற்கு பதிலாக, டிக்கெட் பரிசோதகர் அந்த கருவியில் தேடினால், கடைசி நேரத்தில் காலியாக உள்ள படுக்கை விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதன்மூலம், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்பு பட்டியல் பயணிகளுக்கு அந்த படுக்கைகளையும், இருக்கைகளையும் ஒதுக்க முடியும்.
நாள்தோறும் 7 ஆயிரம் பயணிகள்
கடந்த 4 மாதங்களில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 450 ஆர்.ஏ.சி. பயணிகளும், 2 ஆயிரத்து 750 காத்திருப்பு பட்டியல் பயணிகளும் என 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள், கடைசி நேரத்தில் படுக்கை வசதி பெற்றுள்ளனர்.
இதுதவிர, பயன்படுத்தப்படாத சுமார் 7 ஆயிரம் காலி படுக்கைகள், நாள்தோறும் கையடக்க கருவி மூலம் பயணிகள் முன்பதிவு சேவைக்கு விடுவிக்கப்படுகின்றன. ரெயில் ஓடும்போதே, அடுத்த ரெயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும்வகையில், பயணிகள் அந்த படுக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அபராதம் வசூல்
தற்போது, 1,390 ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு 10 ஆயிரத்து 745 கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 4 மாதங்களில், வாராந்திர, வாரம் இருமுறை ரெயில்கள் உள்பட அனைத்து நீண்ட தூர ரெயில்களிலும் இந்த கருவிகள் வழங்கப்படும்.
கூடுதல் கட்டணம், அபராதம் உள்ளிட்டவை மின்னணு முறையில் வசூலிப்பதற்கும் இந்த கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில், இந்த கட்டணங்களுக்கு இந்த கருவிகளில் ரசீதும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.