நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி கைது செய்யப்படுவார் - அசாம் முதல்-மந்திரி


நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல்காந்தி கைது செய்யப்படுவார் - அசாம் முதல்-மந்திரி
x

ராகுல்காந்தி அசாமை நேசிக்கவில்லை என ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.

கவுகாத்தி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மணிப்பூரில் கடந்த 14-ந் தேதி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். மும்பை வரை இந்த யாத்திரை நடக்கிறது.

நேற்று முன்தினம் அசாம் மாநிலத்தில் இருந்து மேகாலயா மாநிலத்துக்கு சென்ற யாத்திரை, நேற்று மீண்டும் அசாமுக்குள் நுழைந்தது. அசாம் தலைநகர் கவுகாத்தி நோக்கி தொண்டர்கள் புடைசூழ ராகுல்காந்தி பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

ஆனால், கவுகாத்தி நகர எல்லையில் போலீசார் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். நகருக்குள் நுழைய அனுமதி மறுத்தனர். நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா ஏற்கனவே கூறியிருந்தார்.

யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை அடித்து நொறுக்கினர். பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த சாலை தடுப்புகள் சேதம் அடைந்தன.

அதையடுத்து அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா, ராகுல்காந்தி மக்களை இதுபோன்ற வன்முறை செயலுக்குத் தூண்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்வதற்கு காவல்துறைக்கு பரிந்துரைத்தார். அதன்படி ராகுல் காந்தியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிப்ஸாகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஹிமந்த பிஸ்வ சர்மா, ராகுல் காந்தியின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தும். மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார். மேலும் ராகுல்காந்தி அசாமை நேசிக்கவில்லை. ஸ்ரீமந்த சங்கர்மகாதேவ பிறந்த இடத்திற்கு சென்று ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க ஒரு பிரச்சினையை செய்தார் என்றார்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் அரசாங்கம் எத்தனையோ வழக்குகளை பதிவு செய்யலாம், ஆனால் அவரை (ராகுல்காந்தி) மிரட்ட முடியாது என்று அசாம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.


Next Story